புத்ராஜெயா, ஏப்ரல்.25-
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு குற்றவியல் வழக்கு ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவிக்க 5 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றக் குற்றத்திற்காக 6 மாத சிறை மற்றும் 25 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்ட முன்னாள் செஷன்ஸ் நிதிமன்ற நீதிபதிக்கு எதிரான தண்டனையை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று உறுதிச் செய்தது.
மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமட் நஸ்லான் முகமட் காஃஸாலி, சம்பந்தப்பட்ட முன்னாள் நீதிபதியின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்வதுடன், சிறைத் தண்டனை அமலாக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாகத் தீர்ப்பு அளித்தார்.
ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான அஸ்மில் முஸ்தப்பா இழைத்தக் குற்றம் கடுமையானது என்றும், நீதித்துறையில் வழங்கப்பட்ட நம்பகமான பொறுப்பை அவர் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்றும் அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ முகமட் நஸ்லான் வர்ணித்தார்.
லஞ்சம் குற்றங்கள், ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைத்து விடும் என்பதுடன், நீதிபதி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் போது, நீதியையும் நியாயத்தையும் எதிர்பார்த்து வருகின்ற மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும் என்று டத்தோ முகமட் நஸ்லான் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
அப்பீல் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து அந்த முன்னாள் நீதிபதி உடனடியாக சிறைச்சாலைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.