முகைதீன் யாசினிடம் கடப்பிதழ் தற்காலிகமாக ஒப்படைப்பு

கோலாலம்பூர், ஏப்ரல்.25-

ஆஸ்திரேலியாவில் நோய்வாய்ப்பட்டுள்ள தனது அண்ணியைச் சென்றுக் காண்பதற்கு முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினின் கடப்பிதழைத் தற்காலிமாக அவரிடம் ஒப்படைப்பதற்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

முகைதீன் யாசின் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு துணை பப்ளிக் பிராசிகியூட்டர் நோராலிஸ் மாட், எவ்வித ஆட்சேபத்தையும் தெரிவிக்காததைத் தொடர்ந்து கடப்பிதழைத் தற்காலிகமாக ஒப்படைப்பதற்கு நீதிபதி அஸூரா அல்வி அனுமதி அளித்தார்.

கடப்பிதழைத் தற்காலிகமாக ஒப்படைப்பதற்கு இதற்கு முன்பு, முகைதீன் செய்து கொண்ட பல விண்ணப்பங்களுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

தாம் எதிர்நோக்கிய கணையம் புற்று நோய்க்குச் சிகிச்சைப் பெற லண்டனுக்குச் சென்றது, சிங்கப்பூரில் மருத்துவச் சோதனைக்கு உட்பட்டது, தாய்லாந்தில் உறவினரின் உணவகத் திறப்பு விழாவில் பங்கேற்றது, பேத்தியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டது முதலியவற்றுக்கு கடப்பிதழை பெற முகைதீனுக்கு நீதின்றம் அனுமதி அளித்தது.

பெர்சத்து கட்சியின் தலைவரான 77 வயது முகைதீன், நாட்டின் எட்டாவது பிரதமராகப் பொறுப்பில் இருந்த போது ஜானா விபாவா திட்டத்தில் 23 கோடியே 25 லட்சம் ரிங்கிட் லஞ்சம் பெற்றது தொடர்பில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 4 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS