மாதுவிற்கு விதிக்கப்பட்ட 3 மாத சிறை 6 நாட்களாகக் குறைக்கப்பட்டது

கோலாலம்பூர், ஏப்ரல்.25-

பல்பொருள் அங்காடியில் முட்டை, மளிகைப் பொருட்களைத் திருடிய குற்றத்திற்காக மாது ஒருவருக்கு விதிக்கப்பட்ட 3 மாத சிறைத் தண்டனை 6 நாட்களாகக் குறைக்கப்பட்டது.

அந்த மாதுவிற்கு விதிக்கப்பட்ட 3 மாதத் தண்டனையை எதிர்த்து, வழக்கறிஞர் ஒருவர், உயர் நீதிமன்றத்தில் செய்து கொண்ட மேல்முறையீடு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கின் சாரம்சத்தைச் செவிமடுத்த உயர் நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டி, 374 ரிங்கிட் 69 காசு மதிப்புள்ள உணவு மற்றும் மளிகைக் பொருட்களைத் திருடிய குற்றத்திற்கு 3 மாதச் சிறைத் தண்டனை விதிப்பது அதிகபட்சமானதாகும் என்றார்.

3 மாதச் சிறைத் தண்டனையை 6 நாட்களாகக் குறைப்பதாக நீதிபதி முனியாண்டி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸில் பல்பொருள் அங்காடியில் முட்டை மற்றும் மளிகைப் பொருட்களைத் திருடியதற்காக சரவாக்கைச் சேர்ந்த லினி அஹ்மாட் என்ற 38 வயதுடைய அந்த மாதுவிற்கு கடந்த திங்கட்கிழமை மாஜிஸ்திரேட் அய்னா அஸாரா அரிபிஃன் 3 மாதச் சிறைத் தண்டனையை விதித்தார்.

இன்று செய்து கொள்ளப்பட்ட மேல்முறையீட்டில், அந்த மாது இக்குற்றத்தை இழைக்கும் போது மிகுந்த நெருக்கடியில் இருந்ததாக அவரின் சார்பில் ஆஜரான இலவச சட்ட ஆலோசனை மையத்தை சேர்ந்த வழக்கறிஞர் கோலின் அண்ட்ரூ உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கைக்குழந்தையுடன் இருக்கும் அந்த மாது, தனது செயலுக்காக வருந்துவதாகவும் கோலின் அண்ட்ரூ குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS