கோலாலம்பூர், ஏப்ரல்.25-
பிரபல கலைஞரும், பாடகருமான சிவகுமார் ஜெயபாலன், தனது தாயாருடன் சேர்ந்து அடுக்குமாடி வீட்டின் 11 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணமுற்றார்.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை மதியம் 12.35 மணியளவில் கோலாலம்பூர், செராஸ், தாமான் டேசா பெட்டாலிங்கில் உள்ள ஒரு கொண்டோமினியம் வீடமைப்புப் பகுதியில் நிகழ்ந்தது.
48 வயதான சிவகுமாரும், அவரின் 76 வயது தாயாரும் 11 ஆவது மாடியிலிருந்து விழுந்திருக்கின்றனர் என்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று செராஸ் மாவட்ட போலீரஸ் தலைவர் ஏசிபி அய்டில் போல்ஹாசான் தெரிவித்தார்.
தாய், மகன் மரணத்தில் எந்தவொரு குற்றத்தன்மையும் இல்லை. இருவரின் மரணத்தையும் போலீசார் திடீர் மரணம் என்று வகைப்படுத்தியிருப்பதாக இன்று இரவு வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஏசிபி அய்டில் போல்ஹாசான் குறிப்பிட்டார்.
எனினும் கலைஞர் சிவகுமாரும், அவரின் தாயாரும் எதற்காக இந்த முடிவை எடுத்தனர் என்பது குறித்து பல கோணங்களில் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
தலையிலும், உடலிலும் கடுமையான காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரின் உடல்களும் சவப் பரிசோதனைக்காக சான்சலர் துவான்கு மூரிஸ் மருத்துவமனையின் சவக் கிடங்கிற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவர்களின் மரணம் தொடர்பில் தகவல் கொண்டிருப்பவர்கள் போலீசாருடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
கலைஞரும், பாடகருமான சிவகுமார் 2006 ஆம் ஆண்டில் ஆஸ்ட்ரோ நடத்திய பாடல் திறன் போட்டியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆஸ்ட்ரோ நடத்திய ஆஸ்ட்ரோ கோ ஷோப் நிகழ்விலும் அறிவிப்பாளராக சிவகுமார் சிறந்த பங்களிப்பை வழங்கினார்.
திருமணமான சிவகுமார், மண முறிவுக்குப் பின்னர் தனது தாயாருடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு மகன் இருக்கிறார்.