ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் சுறுசுறுப்பாக நடைபெறுகிறது

தாப்பா, ஏப்ரல்.26-

பேரா, தாப்பா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு, இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.

வாக்களிப்பு சுறுசுறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இந்த மும்முனைப் போட்டியில் களம் இறங்கிய மூன்று வேட்பாளர்கள், காலையிலேயே வாக்களித்து, தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

காலை 8 மணிக்கு வாக்களிப்பு மையம் திறக்கப்பட்டவுடனே முதலில் வாக்களித்தவர் பிஎஸ்எம் கட்சி வேட்பாளர் பவானி கே.எஸ். ஆவார்.

தாப்பா, ஆயர் கூனிங், பெங் லோக் தேசிய சீனப்பள்ளியில் பவானி கே.எஸ். வாக்களித்தார். எட்டு நிமிடத்தில் வாக்களித்து விட்டு, பவானி திரும்பினார்.

அடுத்தது, பாஸ் கட்சி சார்பில் போட்டியிடும் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் அப்துல் முஹைமின் மாலேட், காலை 8.30 மணியளவில் ஆயர் கூனிங், தேசிய தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார்.

அம்னோவைச் சேர்ந்த பாரிசான் நேஷனல் வேட்பாளர் டாக்டர் முகமட் யுஸ்ரி பாக்கீர், காலை 8.47 மணியளவில் சுங்கை லெசோங் தேசிய தொடக்கப் பள்ளியில் வாக்களித்தார்.

வாக்காளர்களில் மூத்த குடிமக்கள் காலை 7.30 மணியளவில் வாக்களிப்பு மையங்களில் திரண்டதாக பெர்னாமா கூறுகிறது.

WATCH OUR LATEST NEWS