இந்திய சமூகத்தின் விசுவாசம் எப்படிப் பட்டது? நான்கு இந்தியர்களை நினைவுகூர்ந்தார் பேரரசியார் ராஜா ஸாரித் சோபிஃயா

கோலாலம்பூர், ஏப்ரல்.26-

மலேசிய இந்திய சமூகத்தினர், சில தரப்பினரால் வசை மொழித் தாக்குதல் தொடுக்கப்பட்டு வரும் நிலையில், பேரரசியார் ராஜா ஸாரித் சோபிஃயா, 2018 ஆம் ஆண்டு வெளியிட்ட ஓர் அறிக்கையின் சாரம்சத்தை மீண்டும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்திய சமூகத்துடன் தனது அரச குடும்பம் எந்த அளவிற்கு நெருங்கிய உறவை வைத்திருந்தது என்பது குறித்து பேரரசியார், ராஜா ஸாரித் சோபிஃயா நாட்டு மக்களுடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

ஆயுத மோதல்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளைப் போல் அல்லாமல், மலேசியா, ஓர் அதிர்ஷ்டமிக்க நாடு என்று பேரசியார், நாட்டு மக்களுக்கு நினைவுப்படுத்தினார்.

இத்தகைய ஆசிர்வதிப்பிற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். நாட்டில் உள்ள பல்வேறு இனத்தவர்களுக்கு இடையிலான உறவுகளைச் சீர்குலைக்க வேண்டுமென்றே பிரச்சினைகளைத் தூண்டி வருகின்றவர்கள் நம்மிடையே இருக்கவே செய்கின்றனர் என்று பேரரசியார் குறிப்பிட்டார்.

ஆனால், இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த நால்வர், தங்கள் குடும்பத்தினருடன் எந்த அளவிற்கு விசுவாசமாகவும், நன்றியுள்ளவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதற்கு நான்கு இந்தியர்களை பேரரசியார் ராஜா ஸாரித் சோபிஃயா ஒரு முன்னுதாரமாக அடையாளம் காட்டினார்.


மருத்துவர்களான சுப்பிரமணியம் பாலன், சிங்காரவேலு மற்றும் பாதுகாவலரான மோகன், முகாம் கண்காணிப்பாளரான சுகுமாறன் ஆகியோரை அவர் நினைவுகூர்ந்தார்.

மருத்துவர்களான சுப்பிரமணியம் பாலன் மற்றும் சிங்காரவேலு ஆகியோர், பல வருடங்களாக, என் கணவர் அல்லது குழந்தைகள் நள்ளிரவில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது, இந்த இரண்டு மருத்துவர்களில் ஒருவர் எங்களுக்கு சிகிச்சை அளிக்க விரைந்து வருவார்கள்.

அவர்கள் அடிக்கடி வரும் போது நேரத்தை பொருட்படுத்துவதில்லை. அது நள்ளிரவுக்கு முன்போ அல்லது அதிகாலை 3 மணியோ இருக்கலாம்.

எனது புதல்வர்களில் ஒருவரான மறைந்த துங்கு அப்துல் ஜலீலுக்கு, கல்லீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட போது, சுப்பிரமணியம் மற்றும் சிங்காரவேலு அளித்த சிகிச்சையில் குடும்பம் சற்று நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது.

மகன் ஜலீல் சிறியவராக இருந்த போது அவரை, இரு மருத்துவர்களும் அடிக்கடி வந்து கவனித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டு இருந்தனர். அவர்களின் முகங்களில், கள்ளம் கபடமில்லாத நட்புறவு தெரிந்தது. பிரதிபலனை எதிர்பார்க்கவில்லை.

மகன் ஜலீல் தனது இறுதி மூச்சை விடும் போது, நேரத்தைப் பார்த்து அவரின் மரண நேரத்தை உறுதிப்படுத்தியவர் டாக்டர் டத்தோ சுப்பிரமணியம் பாலன் தான்.

தற்போது ஜோகூர் மாநிலத்தின் இடைக்கால சுல்தானாக இருக்கும், பட்டத்து இளவரசர் இஸ்மாயில் இப்ராஹிமை, ஒரு வயதிலிருந்து கவனித்துக் கொண்டவர் மோகன் என்ற மற்றோர் இந்தியர் ஆவார்.

எனது கணவர் சுல்தான் இப்ராஹிம், ஸ்தூலாங் கடற்பகுதியில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த காலக் கட்டத்தில் மூத்த புதல்வரான இஸ்மாயிலைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டவர் மோகன்தான்.

உண்மையில் மோகன்தான், என்னுடைய அனைத்துப் பிள்ளைகளுக்கும் , நீச்சல் கற்றுக் கொடுத்தவர். பிள்ளைகளுடன் மணிக் கணக்கில் தண்ணீரில் இருக்கக்கூடிய மிகத் திறமைசாலி ஆவார்.

மோகன் பயிற்சியாளர் மட்டுமின்றி பிள்ளைகளுக்கு விளையாட்டுத் தோழனாகவும் இருந்தார். எனது கணவர் வெளியில் செல்லும் சமயத்தில் பாதுகாப்புக் காரணங்களுக்காக மோகனை எங்கள் வீட்டிலேயே, தங்கச் சொல்வார்.

காலையில் மற்ற ஊழியர்கள் வேலைக்கு வரும் வரை மோகன் தூங்க மாட்டார். எங்கள் குழந்தைகளை அந்த அளவிற்கு கண்களை இமைக் காப்பது போல் கவனித்துக் கொள்ளக்கூடிய பொறுப்பு மிகுந்தவர்.

எனது கணவருக்கு உதவியாளராக பணியாற்றிய மற்றோர் இந்தியர் சுகுமாறன் என்பவர் ஆவார். சுகுமாறனை சுல்தான் கடுமையாகத் திட்டிய போதிலும் தொடர்ந்து சுல்தானுக்கும், அரச குடும்பத்தினருக்கும் மனம் மாறாத, விசுவாசமிக்க, அன்புமிக்க பணியாளராக சுகுமாறன் திகழ்ந்தார்.

2009 ஆம் ஆண்டு நான் இங்கிலாந்தில் விடுமுறையில் இருந்த போது, என் இளைய மகனின் சிறந்த நண்பராக சுகுமாறன் இருந்தார். மரங்களிலிருந்து ஆப்பிள்களைப் பறிக்கவும், தோட்டத்தில் உள்ள வாத்துகளுக்கு உணவளிக்கவும் அவனுக்கு சுகுமாறன் உதவினார்.

எனக்கும் என் கணவருக்கும் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த பல நண்பர்கள் உள்ளனர். ஆனால், இப்போதைக்கு, மலேசியாவில் இந்தியர்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்படும் பதட்டங்கள் காரணமாக, இந்த நான்கு இந்தியர்களின் சேவை, நட்பு மற்றும் விசுவாசத்தை எங்கள் குடும்பம் எந்த அளவிற்கு பாராட்டுகிறது, மதிக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கவே இதனைக் கூறுகிறேன் என்று கடந்த 2018 ஆம் ஆண்டில் தாம் எழுதிய ஒரு குறிப்பை பேரரசியார் ராஜா ஸாரித் சோபிஃயா மீண்டும் நினைவு கூர்ந்துள்ளார்.

சீஃபீல்ட் கோயில் கலவரத்தின் உச்சக் கட்டத்திக், தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் உயிரிழந்த போது பிரச்னை எழுந்த காலக் கட்டத்தில் இந்திய சமூகத்தின் மகத்துவத்தை எடுத்துரைக்க பேரரசியார் ராஜா ஸாரித் சோபிஃயா இந்த குறிப்பை எழுதியதாகக் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS