தாப்பா, ஏப்ரல்.26-
மிகப் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் பேரா, தாப்பா நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் இன்று நடைபெற்று வரும் வேளையில் வாக்களிப்பு மந்தமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 31 ஆயிரத்து 281 வாக்காளர்களைக் கொண்ட ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதியில் பிற்பகல் 3 மணி வரை 50.18 விழுக்காட்டு வாக்குகள் மட்டுமே பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் அறிவித்துள்ளது.
இந்த இடைத் தேர்தலுக்கு மொத்தம் 18 வாக்களிப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. வாக்களிப்பு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. ஒரே ஒரு வாக்களிப்பு மையமான தோ தண்டேவா சக்தி தேசியப்பள்ளி வாக்களிப்பு மையம் மட்டும் மாலை 4 மணிக்கு மூடப்பட்டு விட்டதாக அது தெரிவித்தது.
கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது, ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதியில் 74.7 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக எஸ்பிஆர் குறிப்பிட்டுள்ளது.