பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்.26-
சிங்கப்பூரின் 2025 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள வேளையில் மலேசியாவில் உள்ள மதவாதக் கட்சியான பாஸ் தலையிடுகிறது என்று அந்த நாட்டின் உள்துறை அமைச்சு பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.
பாஸ் கட்சியின் இரண்டு முன்னணித் தலைவர்கள் சிங்கப்பூர் தேர்தலில் தலையிடுகின்றனர் என்று சிங்கப்பூர் உள்துறை அமைச்சும், பொதுத் தேர்தல் இலாகாவும் கூட்டாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் அம்பலப்படுத்தியுள்ளன.
பாஸ் கட்சியின் தேசிய பொருளாளர் இஸ்கண்டார் அப்துல் சாமாட் மற்றும் பாஸ் கட்சியின் சிலாங்கூர் மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் முகமட் சுக்ரி ஓமார் ஆகிய இரு தனிநபர்கள் 2025 ஆம் ஆண்டு சிங்கப்பூர் தேர்தலில் தலையிட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சும், தேர்தல் இலாகாவும் குற்றஞ்சாட்டியுள்ளன.
சிங்கப்பூர் அரசியல் தொடர்பாக அங்குள்ள மலாய்க்காரர்களுக்கு அறிவுறுத்துவது போல் தங்கள் முகநூலில் அவர்கள் கருத்து பதிவேற்றம் செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 22, 23 ஆம் தேதிகளில் பாஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ஹராக்காவில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு அவ்விருவரும் சிங்கப்பூரில் உள்ள மலாய்க்காரர்களை உசுப்பி விட்டு வருகின்றனர்.
சிங்கப்பூரில் நகரங்களிலிருந்து மலாய்க்காரர்களை விரட்டிய பழைய அத்தியாயம் தொடர வேண்டாம் என்று இனத்துவேஷ தன்மையில் அவ்விருவரும் தங்கள் முகநூலில் கருத்து வெளியிட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் இனபேதமின்றி சிங்கப்பூரியர்கள் என்ற ஒரே அந்தஸ்தில் நாட்டு மக்களை வழிநடத்தி வரும் வேளையில் பொதுத் தேர்தல் நடைபெறும் முக்கியமானக் காலக் கட்டத்தில் வெளிநாட்டவர்களின் தலையீடு இருப்பது தேர்தல் சட்டத்தின் கீழ் பெரும் குற்றமாகும் என்று சிங்கப்பூர் எச்சரித்துள்ளது.