சண்டாகான், ஏப்ரல்.27-
பேரா, ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வெற்றி பெற்றது எதிர்க்கட்சிகளின் இனவாத பிரச்சாரத்தை மக்கள் நிராகரித்ததாக பிகேஆர் தகவல் தொடர்புத் தலைவர் பாஃமி பாஃட்சீல் கூறினார். நேற்று நடைபெற்ற மும்முனைப் போட்டியில், பாரிசான் நேஷனல் வேட்பாளர் முகமட் யுஸ்ரி பாகீர் 5,006 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது 2022 பொதுத் தேர்தலில் அந்த கூட்டணி பெற்ற 2,213 வாக்குகள் வித்தியாசத்தை விட இரு மடங்கு அதிகமாகும். பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் அப்துல் முஹைமின் மாலேக் 6,059 வாக்குகளைப் பெற்றார். மலேசிய சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே.எஸ். பவானி 1,106 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
அதிக வாக்கு வித்தியாசத்தில் கிடைத்த இந்த வெற்றி, மடானி அரசாங்கத்தின் முயற்சிகளுக்குக் கிடைத்த அங்கீகாரம் என்றும், வாக்காளர்கள் பிளவை விரும்பவில்லை என்பதையும் காட்டுவதாக தகவல் தொடர்பு அமைச்சராகவும் இருக்கும் பாஃமி தெரிவித்தார்.
தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சரிந்த நிலையில், ஆளும் கூட்டணி 19 வாக்குப்பதிவு மையங்களில் வெற்றி பெற்றது. இது ஆரோக்கியமான பரப்புரை நடவடிக்கையின் விளைவு என்றும், இனவாதத்தை மக்கள் புறக்கணிப்பதாகவும் பாஃமி தெரிவித்தார். இந்த வெற்றி ஒரு நல்ல அறிகுறியாக இருந்தாலும், வரவிருக்கும் சபா தேர்தலை எதிர்கொள்ள தொடர்ந்து பணியாற்ற வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.