அலோர் ஸ்டார், ஏப்ரல்.27-
கெடா, யானில் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்ட இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தொற்று பரவியதை அம்மாநில அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
கெடா மாநில வீட்டு வசதி, ஊராட்சி மன்றம், சுகாதார ஆட்சிக்குழுத் தலைவர் மன்சோர் ஸாகாரியா இது குறித்து கூறுகையில், தனியார் முகாம் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற 763 பேரில் 39 மாணவர்களுக்கும் பள்ளி ஊழியர்களுக்கும் காய்ச்சல், இருமல், உடலில் தடிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். இருப்பினும், தொற்று குறித்து மேலும் கருத்து தெரிவிக்க மறுத்த அவர், இது குறித்து மேலும் தகவல்களைப் பெற இன்று மாலை அந்த முகாம் தளத்திற்குச் செல்லவிருப்பதாகத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அனைவரும் சுங்கை பட்டாணியில் உள்ள சுல்தான் ஹாலிம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து மாநில சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவத்திற்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் மன்சோர் தெரிவித்தார்.