பட்டர்வொர்த், ஏப்ரல்.27-
திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடை காரணமாக பாதிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களில் 70 விழுக்காடு பயனர்களுக்கு நீர் விநியோகத்தை பினாங்கு நீர் விநியோகக் கழகம் மீட்டெடுத்துள்ளது. 23 நீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக இந்த பாதிப்பு ஏற்பட்டது. PBAPP தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ கே. பத்மநாதன் இன்று மாலை 4 மணி நிலவரப்படி 3 இலட்சத்து 41 ஆயிரத்து 708 பயனர்களில் 2 இலட்சத்து 28 ஆயிரத்து 915 பேருக்கு நீர் விநியோகம் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.
பிறை ஆற்றைக் கடக்கும் குழாய் பணியை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், பாதிக்கப்பட்ட அனைத்து பயனர்களுக்கும் திட்டமிட்டபடி நீர் விநியோகத்தை மீட்டெடுக்க அக்கழகம் தொடர்ந்து பணியாற்றும். பினாங்குத் தீவின் தெற்கிலும், மேற்கின் இறுதிப்பகுதியிலும் உயரமான பகுதிகளிலும் நாளை காலை 10 மணிக்குள் நீர் விநியோகம் சீராகும். சுங்கை டூவா நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட நீர் இறைக்கும் உள்கட்டமைப்பு இருப்பதால், அடுத்த 24 மணி நேரத்தில் பினாங்கின் மிகப் பெரிய நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து முடிந்தவரை சுத்திகரிக்கப்பட்ட நீரை அக்கழகம் பாதுகாப்பாக இறைக்கும் என்று அவர் கூறினார். முன்னதாக, மாநிலம் முழுவதும் 23 திட்டமிடப்பட்ட நீர் பணிகளை மேற்கொள்வதற்காக சுங்கை டூவா நிலையத்தில் பணி நிறுத்தம் செய்யப்பட்டதால், பினாங்கில் 3 இலட்சத்து 41 ஆயிரத்து 708 பயனர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.