சிரம்பான், ஏப்ரல்.28-
நாட்டில் மிகப் பழமை வாய்ந்த தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றான 125 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட சிரம்பான், லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளிக்குத் திறந்த வெளி மண்டபம் மற்றும் சிற்றுண்டிச் சாலைக் கட்டுமானத் திட்டம், ஆண்டு இறுதியில் பள்ளி விடுமுறையின் போது தொடங்கப்படும் என்று நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜ. அருள்குமார் தெரிவித்தார்.
சுமார் 10 லட்சம் ரிங்கிட் செலவிலான இவ்விரு கட்டுமானப் பணிகளும் நிறைவு பெற்ற பின்னர் அடுத்த ஆண்டு புதிய கல்வியாண்டில் அவற்றை மாணவர்கள் பயன்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அருள்குமார் குறிப்பிட்டார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பல வசதிகளைக் கொண்டுள்ள பள்ளிகளில் ஒன்றாக சிரம்பான், லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி விளங்குகிறது.
தற்போது 710 மாணவர்கள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். அதிகமான வசதிகளைக் கொண்டுள்ள பள்ளியாக விளங்கிய போதிலும் ஓரிரு வசதிகள் இல்லை என்பது உண்மையாகும். அந்த வசதிகளையும் பூர்த்தி செய்வோமானால் ஆயிரம் மாணவர்கள் பயிலக்கூடிய பள்ளியாக லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியை உயர்த்த முடியும் என்று அருள் குமார் குறிப்பிட்டார்.
கடந்த சனிக்கிழமை பள்ளியின் 52 ஆம் ஆண்டு பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டத்த்கை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அருள் குமார் இதனைத் தெரிவித்தார்.

பள்ளிக்குத் திறந்த வெளி மண்டபம் மற்றும் புதிய சிற்றுண்டிச் சாலை கட்டும் திட்டம் பேசி தீர்மாணிக்கப்பட்ட முதல் நாளிலேயே ஜேடி நட்சத்திரம் குழுமத்தின் பொறுப்பாளர்களைச் சென்று சந்தித்த போது, ஜேடி நட்சத்திரம் குழுமம் மொத்த செலவிலிருந்து 50 விழுக்காட்டுத் தொகையை ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்துள்ளது என்று அருள் குமார் தெரிவித்தார்.
பள்ளி நிர்வாகம், பள்ளி மேலாளர் வாரியம், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கம் ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு இன்னும் தேவைப்படக்கூடிய 5, 6 லட்சம் வெள்ளியை அடுத்த மே மாதம் 22 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நல்லெண்ண விருந்து நிகழ்வின் மூலம் திரட்டி விட முடியும் என்று அருள் குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கு மாநில அரசாங்கம், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மூலம் கணிசமான தொகை கிடைக்கப் பெற்று இருப்பதையும் அருள் குமார் விளக்கினார்.