ஷா ஆலாம்,ஏப்ரல்.28-
ஷா ஆலாமில் உள்ள ஒரு நகைக்கடையில் வாடிக்கையாளர்களைப் போல் பாவனை செய்த ஒரு தம்பதியர் சுமார் ஒரு லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள தங்க ஆபரணங்களைக் களவாடிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்துள்ளதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
நகைக்கடைப் பணியாளர்கள், வாடிக்கையாளர்களிடம் நகைகளைக் காட்டுவதில் மும்முரமாக இருந்த போது சம்பந்தப்பட்ட பெண், நகைக்கடையின் பணியாளர்களுக்குத் தெரியாமல் நகைகளை எடுத்து பாக்கெட்டில் பதுக்கியுள்ளார் என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக முகமட் இக்பால் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திருடப்பட்ட நகைகளில் இரண்டு மோதிரங்கள், 3 நெக்லஸ்கள் அடங்கும். இதனால் நகைக்கடைக்கு ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 743 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பெண், முகக் கவசம் அணிந்திருந்த வேளையில் அவரின் கணவர் சிவப்பு நிறத்க் தொப்பியையும் சன்கிலாஸ் கண்ணாடியையும் அணிந்திருந்ததாக முகமட் இக்பால் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட தம்பதியரை போலீசார் தீவிரமாகத் தேடி வருவதாக அவர் மேலும் கூறினார்.