ஷா ஆலாம், ஏப்ரல்.28-
2025 ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் பொதுத் தேர்தல் வரும் மே 3 ஆம் தேதி நடைபெறும் வேளையில் அந்த தேர்தலில் மலாய்க்கார வாக்காளர்களைத் திசை திருப்ப பாஸ் கட்சி தலையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது என்றும் மிகைப்படுத்தப்பட்டு கூறப்பட்டுள்ளது என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுடின் ஹாசான் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் இந்த குற்றச்சாட்டு ஒரு தலைபட்சமானது என்று தக்கியுடின் ஹசான் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 5 நாட்கள் இருக்கும் பட்சத்தில் பொதுத் தேர்தலின் முடிவுகளைத் தீர்மானிக்க பாஸ் கட்சி முயற்சிப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சும், தேர்தல் ஆணையமும் கூறுவது ஏற்புடையது அல்ல.
சிங்கப்பூரில் உள்ள மலாய்க்காரர்களைக் கவர தேர்தல் விவகாரத்தில் தாங்கள் தலையிடவில்லை என்றும் முஸ்லிம் என்ற முறையில் சிங்கப்பூரில் உள்ள மலாய்க்காரர்கள் மீது பாஸ் கட்சிக்கு அக்கறை உண்டு என்றும் பாஸ் கட்சியின் தேசியப் பொருளாளர் டத்தோ இஸ்கண்டார் அப்துல் சாமாட் மற்றும் சிலாங்கூர் மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் முகமட் சுக்ரி ஓமார் ஆகியோர் தெளிவுப்படுத்தியுள்ளதாக தக்கியுடின் ஹசான் விளக்கினார்.
அதேவேளையில் பாஸ் கட்சியின் இரு தலைவர்களும் சிங்கப்பூர் தேர்தல் குறித்து சமூக ஊடகங்களில் பதிவுச் செய்தது, அவர்களின் தனிப்பட்ட கருத்தே தவிர பாஸ் கட்சியின் நிலைப்பாடு அல்ல என்பதையும் அவர் விளக்கினார்.
சிங்கப்பூர் பொதுத்தேர்தல் தொடர்பாக வெளிநாட்டிலிருந்து சமூக ஊடகங்களில் இடப்பட்ட பதிவுகள் வரம்பு மீறியிருப்பதாக அக்குடியரசின் பிரதமர் லோரன்ஸ் வோங் கடந்த சனிக்கிழமை சாடியிருந்தார்.
அரசியல் விவகாரங்களில் சமயத்தையும், இனத்தையும் கலக்க சிங்கப்பூர் விரும்பியதில்லை. சிங்கப்பூரின் ஒற்றுமை, சமயத்தையும் இனத்தையும் கடந்தது.
சிங்கப்பூரில் பல்லின, பல சமய சமூகத்தின் ஆணிவேராக உள்ள இந்த ஒற்றுமை, தற்செயலாக உருவாகவில்லை என்றும் பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த சிங்கப்பூரியர்களின் வலிமிகுந்த கடின உழைப்பாலும் பொறுமையுடன் மேற்கொள்ளப்பட்ட முயற்சியாலும் விளைந்தது என்றும் அந்நிய சக்திகளுக்கு பிரதமர் லோரன்ஸ் வோங் எச்சரித்து இருந்தார்.