புக்கிட் மெர்தாஜம், ஏப்ரல்.29-
தனது சொந்த நண்பரால் கத்தியால் குத்தப்பட்டதாக நம்பப்படும் முதியவர் ஒருவர், ஆழமான கத்திக் குத்துக் காயத்துடன் உயிரிழந்தார்.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் புக்கிட் மெர்தாஜம், சேரோக் தோகுன் என்ற இடத்தில் உள்ள கொட்டகையில் நிகழ்ந்தது.
அந்த கொட்டகையில் கொலை செய்யப்பட்ட முதியவர், பிடிபட்ட சந்தேகப் பேர்வழி கிட்டத்தட்ட ஐந்து பேர், அரட்டை அடித்துக் கொண்டு இருந்த போது, மூன்று நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு, திடீரென்று வாய்ச் சண்டையாக மாறி, கடைசியில் கொலையில் முடிந்துள்ளது என்று செபராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹெல்மி அரிஸ் தெரிவித்தார்.
தனது சொந்த நண்பரான 65 வயதுடைய நபரை முதலில் மரக்கட்டையால் தாக்கிய சந்தேகப் பேர்வழி,/ பின்னர் கத்தியால் அவரின் நெஞ்சிலேயே குத்தியதாக நம்பப்படுகிறது. ஆழமான கத்திக் குத்துக் காயங்களுக்கு ஆளான அந்த முதியவர், சம்பவ இடத்திலேயே மாண்டதாக ஏசிபி ஹெல்மி அரிஸ் குறிப்பிட்டார்.
இக்கொலை தொடர்பில் 70 வயது சந்தேகப் பேர்வழி உட்பட ஐந்து நபர்களை போலீசார் கைது செய்து இருப்பதாக அந்த உயர் போலீஸ் அதிகாரி கூறினார்.