லிம் குவான் எங் வழக்கில் ஜுன் 12 இல் எழுத்துப்பூர்வமானத் தீர்ப்பு

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.29-

ஒரு கோடியே 16 லட்சம் ரிங்கிட் செலவிலான வெளிநாட்டுத் தொழிலாளர் தங்குமிடத் திட்ட லஞ்ச ஊழல் தொடர்பில் பினாங்கு முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங் உட்பட மூவருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்வதற்கு உயர் நீதிமன்றம் ஏன் மறுத்து விட்டது என்பதற்கான காரணத்தை விளக்கும் எழுத்துப்பூர்வமானத் தீர்ப்பு வரும் ஜுன் 12 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லிம் குவான் எங், அவரின் துணைவியார் பெட்டி சியூ மற்றும் ஒரு வர்த்தகப் பெண்மணியான பாங் லீ கூன் ஆகிய மூவரும் அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக நீதிமன்றத்தின் எழுத்துப்பூர்வமானத் தீர்ப்பு வெளியிடப்படும் என்று பினாங்கு உயர் நீதிமன்ற நீதிபதி ரோபிஃயா முகமட் தெரிவித்துள்ளார்.

பினாங்கு உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு மே 3 ஆம் தேதி வழங்கிய ஒரு வாய்மொழி தீர்ப்பில், தங்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரும் அம்மூவரின் மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதி ரோபிஃயா முகமட் தீர்ப்பு அளித்து இருந்தார்.

இத்தீர்ப்பை எதிர்த்து அப்பீல் நீதிமனறத்தில் மேல்முறையீடு செய்வதற்கு லிம் குவான் எங் உட்பட அந்த மூவரும் எழுத்துப்பூர்வமானத் தீர்ப்பு கேட்டு மனு செய்திருந்தனர்.

WATCH OUR LATEST NEWS