புத்ராஜெயா, ஏப்ரல்.29-
தனது நெருக்கமான அதிகாரி ஒருவரின் வீட்டில் 17 கோடியே 70 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பில் தற்போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் விசாரணை வளையத்திற்குள் இருந்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு எதிரான விசாரணை இதுவரை 15 முதல் 20 விழுக்காடு மட்டுமே பூர்த்தியாகியுள்ளது.
எஞ்சிய 80 விழுக்காடு விசாரணை முடிவடைவதற்கு, இன்னும் இரண்டு வார காலத்தில் இஸ்மாயில் சப்ரி, மீண்டும் எஸ்பிஆர்எம் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.
அந்த முன்னாள் பிரதமருக்கு எதிராக நடைபெற்று வரும் விசாரணையில் சில முக்கிய ஆவணங்கள் கோரப்பட்டுள்ளளன. அதே வேளையில் தாம் ஏற்கனவே அறிவித்து இருப்பதைப் போல எஸ்பிஆர்எம்மின் இரண்டாம் கட்ட விசாரணையானது, அவரின் சொத்து விபரங்கள் சம்பந்தப்பட்டதாகும் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.
இன்று காலையில் புத்ராஜெயா மாநாட்டு மண்டபத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான தென்கிழக்காசிய லஞ்ச ஊழல் எதிர்ப்பு மீதான மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அஸாம் பாக்கி இதனைத் தெரிவித்தார்.