மாதுவிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்த நபருக்கு 5 ஆண்டு சிறை

கோலாலம்பூர், ஏப்ரல்.29-

கடந்த வாரம் ஓர் உணவகத்தில் மாது ஒருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்து, வழிப்பறி கொள்ளையைப் புரிந்த குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

ஹுசேன் ஐயாசாமி என்ற 39 வயதுடைய நபருக்கான 5 ஆண்டு சிறைத் தண்டனை காலம், அவர் பிடிப்பட்ட தினமான கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக நீதிபதி இஸ்ராலிஸாம் சனூசி உத்தரவிட்டார்.

ஒரு பிள்ளைக்குத் தந்தையான ஹுசேன் ஐயாசாமி, கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி பின்னிரவு 12.38 மணியளவில் கோலாலம்பூர், கெப்போங், தாமான் முத்தியாரா பஃடாசொன் என்ற இடத்தில் உள்ள ஓர் உணவத்தில் 47 வயது மாது ஒருவர், கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்து, வழிபறி கொள்ளைப் புரிந்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தன்று, அந்த சாப்பாட்டுக் கடையில் உணவருந்திக் கொண்டு இருந்த மாதுவிடம், சிகரெட் வாங்குவதற்கு ஹுசேன் ஐயாசாமி பணம் கேட்டுள்ளார். அந்த மாது மறுத்து விட்டதைத் தொடர்ந்து அங்கிருந்து நகர்ந்த ஹுசேன் ஐயாசாமி, சில நிமிடத்திற்குப் பிறகு மாது அமர்ந்திருந்த இடத்திற்கு ஓடி வந்து அவர், கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிக்க முற்பட்டார்.

எனினும் அங்கிருந்த பொது மக்கள் ஹுசேன் ஐயாசாமியை வளைத்துப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தனக்கு எதிராக குற்றத்தை அந்த நபர் ஒப்புக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS