பத்துகேவ்ஸ், ஏப்ரல்.29-
வரும் மே முதல் தேதி வியாழக்கிழமை, பொது விடுமுறை தினத்தன்று பத்துமலைத் திருத்தலத்தில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது.
கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் ஆதரவுடன் டி.எஸ்.கே குழுமம் மற்றும் மலேசிய இந்து ஆலயங்கள், இந்து அமைப்புகள் ஒருங்கிணைப்பு பேரவையான மஹிமா ஆகியவை இணைந்து கந்த சஷ்டி கவசம் பாராயணம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 8.00 மணிக்கு மங்கள வாத்தியங்களுடன் விநாயகர் வழிபாடு நடைபெறும். தொடர்ந்து வேல்மாறல் ஆன்மீக சொற்பொழிவு, காவடி சிந்து குழுவினரின் காவடியாட்டம் இடம் பெறும். காலை 8.30 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாராயணம் நடைபெறும்.
தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜாவின் ஆதவுடன் டி.எஸ்.கே குழுமத் தலைவரும், மஹிமாவின் தலைவருமான டத்தோ என். சிவகுமார் தலைமையில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ தேவராய சுவாமிகள் அருளிய கந்த சஷ்டி கவசம், அதிகமான முருகப் பக்தர்களில் இல்லங்களில் அனுதினமும் ஓதக்கூடிய மகா மந்திரமாகும்.
வீரம், நம்பிக்கை, மன வலிமையைத் தந்து மக்களைப் பாதுகாக்கும் கவசமாக விளங்கும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் நிகழ்வில் மக்கள் திரளாகக் கலந்து கொண்டு முருகப் பெருமானுக்குரிய வழிபாட்டு பாராயணத்திற்குச் சிறப்பு சேர்க்குமாறு டி.எஸ்.கே குழுமம் மற்றும் மஹிமாவின் தலைவர் டத்தோ என். சிவகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.