கோலாலம்பூர், ஏப்ரல்.29-
கோலாலம்பூர், பங்சார், ஜாலான் தெலாவியில் உள்ள ஒரு நாடு கண்டார் உணவகத்தில் உணவு அருந்த வந்த ஒரு பெண்ணுக்குச் சிலர் தொல்லைக் கொடுத்தனர் என்ற சந்தேகத்தை அடுத்து இரண்டு கும்பல்களுக்கு இடையில் நிகழ்ந்த கைகலப்பில் சம்பந்தப்பட்டுள்ள நபர்களில் சிலரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
கடந்த வாரம் வியாழக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து போலீசார் புலன் விசாரணை செய்து வரும் வேளையில், அந்த நாசி கண்டார் உணவகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராப் பதிவை அடிப்படையாகக் கொண்டு கைகலப்பில் ஈடுபட்ட இரு கும்பல்களைச் சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டதாக பிரிக்பில்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கூ மாஷாரிமான் கூ மாமூட் தெரிவித்தார்.
இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை என்ற போதிலும் சம்பந்தப்பட்டவர்கள், அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த நாசி கண்டார் உணவகத்தில் அதிகாலையில் அதிகமான வாடிக்கையாளர்கள் இருந்த வேளையில், தனது உறவினருடன் அங்கு உணவருந்த வந்தப் பெண்ணை, அங்கு இருந்த வாடிக்கையாளர்கள் சிலர் தொல்லைக் கொடுத்ததாக நம்பப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் தன்னுடன் வந்த உறவினர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். உறவினர்கள் சிலர், அந்த நபர்களிடம் இது குறித்து கேட்ட போது, கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது இரு கும்பல்களுக்கு இடையில் கைகலப்பாக மாறியது. இதில் உணவகத்தில் இருந்தவர்கள் நாலா பக்கமும் சிதறி ஓடினர். உணவகப் பொருட்கள் சேதப்பட்டன.