ஷா ஆலாம், ஏப்ரல்.29-
ஷா ஆலாம், செக்ஷன் 13 றில் நேற்று மாலையில் பையன் ஒருவன், இரு ஆடவர்களால் கடத்தப்படுவதிலிருந்து தன்னைத் தானே காப்பாற்றிக் கொண்டான் என்று மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
எனினும் கடத்தல்காரர்களின் பிடியிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அந்தப் பையன் போராடிய போது, முகம் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று மாலை 5.15 மணியளவில் தனியொருவராக மெது ஓட்டத்தில் ஈடுபட்டு இருந்த அந்தப் பையனை, காரில் வந்த இரு ஆடவர்கள் மடக்கியுள்ளனர். பையனைப் பிடித்து காரில் ஏறும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர்.
பையன் மறுத்து விட்டதைத் தொடர்ந்து, அவனைப் பலவந்தமாகப் பிடித்து, காரில் ஏற்றுவதற்கு அந்த இரு ஆடவர்களும் முயற்சித்த போது, அவர்களுடன் போராடிய அந்தப் பையன், அவர்களின் பிடியிலிருந்து திமிறிக் கொண்டு விடுபட்டான்.
அடுத்த கணமே, அருகில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியின் பாதுகாவலர் அறைக்கு ஓடிச் சென்று உயிரைக் காப்பாற்றிக் கொண்டதாக ஏசிபி இக்பால் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், போலீசுக்கு தகவல் அளித்து உதவும்படி பொதுமக்களை ஏசிபி இக்பால் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.