சிரம்பான், ஏப்ரல்.29-
நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் வீற்றிருக்கும் பகுதிகளில் வாகனங்களின் வேக வரம்பு, மணிக்கு 30 கிலோ மீட்டரென அரசு பதிவேட்டில் இடம் பெறவிருக்கிறது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
இந்தப் புதிய விதிமுறை, விரைவில் அமல்படுத்தப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பள்ளி வளாகங்கள் வீற்றிருக்கும் பகுதிகளில் உள்ள பிரதான சாலைகளில் ஆண்டுக்கு சராசரி 70 பேர் உயிரிழக்கும் நிலையில் பள்ளி வளாகங்களில் உள்ள சாலைகளில் வாகனங்களின் வேக வரம்பைக் குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.
துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தலைமையிலான சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் மீதான அமைச்சரவைக் குழு பள்ளி வளாகங்களில் வாகனங்களின் வேக வரம்பைக் குறைக்க அனுமதி அளித்துள்ளதாக அந்தோணி லோக் விளக்கினார்.