பிகேஆர் தொகுதித் தேர்தல்கள் நியாயமாக நடைபெறவில்லையா? குற்றச்சாட்டை மறுத்தார் டத்தோஸ்ரீ அன்வார்

கோலாலம்பூர், ஏப்ரல்.29-

அண்மையில் நடைபெற்று முடிந்த பிகேஆர் கட்சியின், தொகுதித் தேர்தல்கள், பல்வேறு குளறுபடிகளுடன் நியாயமாக நடைபெறவில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டை அக்கட்சியின் தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.

அதே வேளையில் பெறப்பட்டுள்ள எந்தவொரு புகாரும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

பிகேஆர் தொகுதித் தேர்தல்கள் நியாயமாக நடைபெறவில்லை என்று ஏன் நினைக்கிறீர்கள்? புகார்கள் இருப்பதால் மட்டும் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்று அர்த்தமா? இவ்வாறு கூறுவது பாரபட்சம் அல்லவா? என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

கிடைக்கப் பெற்ற புகார்கள் அனைத்தும் ஆராயப்பட்டுள்ளன. அந்தப் புகார்களில் அடிப்படை முகாந்திரங்கள் உள்ளனவா? என்று ஆராயப்படுவதாக பிரதமர் விளக்கினார்.

இன்று கோலாலம்பூர் முக்கிம் பத்துவில் மடானி இளைஞர் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் கட்டுப்படி விலை வீடமைப்புத் திட்டம் ஆகியவற்றின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸாலிஹா முஸ்தாஃபா, வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் மற்றும் பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் P. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

WATCH OUR LATEST NEWS