துரித உணவு உணவகம் & விருந்தோம்பல் பயிற்சி

சிரம்பான், ஏப்ரல்.30-

மனித வள அமைச்சின், மலேசிய இந்தியர்கள் திறன் முன்னெடுப்பு திட்டமான MISI (மிசி), ஏற்பாட்டில் சிரம்பான் ராசாவில் துரித உணவு உணவகம் மற்றும் விருந்தோம்பல் துறைக்கானப் பயிற்சி, சிறப்பாக நடைபெற்றது.

ஆறு நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சியின் இறுதி நாளான நேற்று முன்தினம், துரித உணவகத்தில் உணவு முறை தயாரிப்பு மற்றும் விந்தோம்பல் குறித்த பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பங்கேற்பாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்த ஆறு நாள் பயிற்சியை நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினரும் ரெப்பா சட்டமன்ற உறுப்பினருமான வீரப்பன் சுப்பிரமணியம் அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்தார்.

இந்திய இளையோர்களை தொழில் திறன் பெற்ற தொழில்துறைகளுக்குத் தயார்படுத்தும் வகையில் MISI- யின் மூலம் இந்திய சமுதாயத்திற்கான முன்னெடுப்புத் திட்டத்தை அமல்படுத்தி வரும் மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம்மிற்கு தமது பாராட்டையும் நன்றியையும் வீரப்பன் தெரிவித்துக் கொண்டார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மனித வளத்திற்கு பொறுப்பேற்றுள்ள ஆட்சிக்குழு உறுப்பினர் என்ற முறையில் துரித உணவு உணவகம் மற்றும் விருந்தோம்பல் துறையின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் பொறுப்பு தமக்கு இருப்பதாக வீரப்பன் தெரிவித்தார்.

இப்பபயிற்சியில் பங்கு கொண்ட ஒவ்வொரு பங்கேற்பாளரும் தங்கள் திறன்களை வலுப்படுத்திக் கொள்வதற்கு இந்த ஆறு நாள் பயிற்சி பெறும் பயனாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துக் கொள்வதற்கும், சுய தொழில் புரிவதற்கும் வாய்ப்பு வழங்கக்கூடிய இத்துறையில் 26 பேர் பங்கெடுத்துக் கொண்டதில் மகிழ்ச்சி கொள்வதாக வீரப்பன் தமது உரையில் குறிப்பிட்டார்.

இந்த 26 பேரும், தாங்கள் பணியாற்றக்கூடிய நிறுவனங்களுக்கான நியமனக் கடிதங்களையும் பெற்றுள்ளதாகவும், அதன் வாயிலாக பங்கேற்பாளர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று வீரப்பன் நல்லாசி கூறினார்.

WATCH OUR LATEST NEWS