சிப்பாங், ஏப்ரல்.30-
பல வகையான அரிய வகை ஊர்வனங்களையும், விலங்கினங்களையும் தனது பயணப் பெட்டிக்குள் வைத்து, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு கடத்த முயற்சி செய்ததாக இந்தியப் பிரஜை ஒருவர், சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
தமிழ்நாடு, இராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த டினேஷ் குமார் செல்வம் என்ற 21 வயதுடைய அந்த இந்தியப் பிரஜை, நீதிபதி அஹ்மாட் புஃவாட் ஒத்மான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ஒரு மாணவனான அந்த இந்தியப் பிரஜைக்கு எதிரான குற்றச்சாட்டு மொழிப்பெயர்ப்பாளர் உதவியுடன் தமிழில் வாசிக்கப்பட்டது.
Gibbon வகை குரங்கு குட்டிகள் மற்றும் மஞ்சள் நிற கழுத்தைக் கொண்ட அல்பீனோ வகை ஆமைகள் முதலியவற்றைத் தனது பயணப் பெட்டிக்குள் வைத்து அந்த இந்தியப் பிரஜை கடத்த முயற்சி செய்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இவ்விரு குற்றங்களையும் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி இரவு 7.15 மணியளவில் சிப்பாங் அனைத்துலக விமான நிலையத்தில் டெர்மினல் 1 இல் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு விலங்கினத்திற்கும் 20 ஆயிரம் ரிங்கிட் அபராதம் மற்றும் கூடிய பட்சம் 7 ஆண்டு சிறை விதிக்க வகை செய்யும் 2010 ஆம் ஆண்டு கொடிய விலங்கினச் சட்டத்தின் கீழ் அந்த இந்தியப் பிரஜை குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.
எனினும் தனக்கு எதிரான குற்றத்தை மறுத்து அந்த நபர் விசாரணை கோரியதால் அவருக்கு ஜாமீன் அனுமதிக்கப்பபட்ட வேளையில் இவ்வழக்கு விசாரணை வரும் மே 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.