கோலாலம்பூர், ஏப்ரல்.30-
அண்மையில் வெளிவந்த ஐந்தாம் படிவத் தேர்வில் தமிழ் மாணவர்கள் பத்து பதின்மூன்று ஏக்கள் பெற்றச் செய்தியைப் படித்து மகிழ்ந்திருக்கும் வேளையில், நம்மவர்கள் ஒரு கோடி வெள்ளி போதைப் பொருள் கடத்தலுக்காகத் தடுப்புக் காவலிலும், கொலைக் குற்றத்திற்காக சிறைச் செல்லும் செய்தியும் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தி இருப்பதாக முன்னாள் சுகாதாரத்துறை துணை அமைச்சர் டான்ஶ்ரீ குமரன் இன்று வேதனைத் தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகையில் இந்திய சமுதாயம் பன்னிரண்டு விழுக்காடாக இருந்தபோதே சமுதாயத்தின் சமய, சமுதாய நலன் பேண, அகில மலாயா தமிழர் சங்கம், அகில மலாயா திராவிடர் கழகம், தமிழர், பொங்கல் திருநாள்கள், தமிழ் இளைஞர் மணி மன்றம், தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கம், இந்து இளைஞர் இயக்கம், இந்து சங்கம், இந்து தர்ம மாமன்றம், சைவ சமயப் பேரவை என நூற்றுக்கணக்கான சமூக சமய அமைப்புகள் உள்ளன.
மில்லியன் கணக்கான ரிங்கிட் செலவழித்து சமுதாய நலன் பேண மாதந்தோறும் கல்வி உட்பட பல சமூக நிகழ்ச்சிகளையும் சமய விழாக்களையும் நடத்தி வருகின்றன.
ஆனால், போதைப் பழக்கத்திலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொலை, கொள்ளைகளிலும் ஈடுபட்டு தூக்கிலிடப்படுவதும், சிறைச் செல்வதும் தமக்கு பெரும் மனக் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது என்று மஇகா முன்னாள் உதவித் தலைவருமான டான்ஸ்ரீ குமரன் குறிப்பிட்டார்.
மலேசிய மக்கள் தொகையில் 6.5 விழுக்காடாக குறைந்திருக்கும் நிலையில் தங்களை அழித்துக் கொண்டு குடும்பத்தினருக்கும், தலைக்குனிவை ஏற்படுத்தும் இத்தகைய குற்றவாளிகளின் செயல்களுக்கான காரணங்கள் கண்டறியப்பட வேண்டும்.
அவர்களை நேர்வழிப்படுத்த அரசாங்கத்துடன் இணைந்து அரசியல், சமய, சமய இயக்கங்கள் முன்வர வேண்டும் என்று டான்ஸ்ரீ குமரன் கேட்டுக் கொண்டுள்ளார்.