நிபோங் திபால், ஏப்ரல்.30-
இன்று ஏப்ரல் 30 ஆம் தேதி புதன்கிழமை அட்சய திருதியை நன்னாளில் பினாங்கு, நிபோங் திபால், சுங்கை ஜாவி, ஜாலான் கெரியான் கெடா முக்கிம் 6 இல் வீற்றிருக்கும் ஹரே கிருஷ்ணாவின் ISKCON ( இஸ்கோன் ) நிபோங் திபால் ஶ்ரீ ராதா ஷாம்சுந்தர் பவன் ஆலயத்தின் திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஏ.சி பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதாவால் நிறுவப்பட்ட சர்வதேச கிருஷ்ணா உணர்வாளர் சங்கமான இஸ்கோனின் நிபோங் திபால் ஶ்ரீ ராதா ஷாம்சுந்தர் பவன் ஆலயத்தை இந்துக் கோவில்கள் மற்றும் இந்து அமைப்புகளின் ஒருங்கிணைப்புப் பேரவையான மஹிமாவின் தலைவர் டத்தோ N. சிவகுமார் ரிப்பன் வெட்டி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
பக்தி யோகா பயிற்சியைப் பரப்புவதற்காக இஸ்கோன் உருவாக்கப்பட்ட நிலையில், அதன் உன்னத நோக்கம் பிறழாமல் முன்னெடுத்து, பாடுபட்டு வரும் நிபோங் திபால் கிருஷ்ணா உணர்வாளர்களின் பங்களிப்பை டத்தோ சிவகுமார் தமது உரையில் வெகுவாகப் பாராட்டினார்.
கடந்த ஆண்டில் இதே அட்சய திருதியை நன்நாளில் இஸ்கோன் ஆலயத்தை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சரியாக ஓராண்டில் 5 லட்சம் ரிங்கிட் செலவில் இந்த ஆலயம் நிறுவப்பட்டு, அட்சய திருதியை நன்னாளில் திறப்பு விழா காண்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.
வங்கியில் எந்தவொரு கடனையும் பெறாமல் உறுப்பினர்கள் வழங்கிய நன்கொடையை மட்டுமே கொண்டு, பக்தி பரவசமூட்டும் ஓர் அழகிய திருக்கோவிலை, ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்டு இருப்பது, உறுப்பினர்களின் அர்ப்பணிப்பையும், அவர்களின் தன்னலமற்ற உணர்வையும் காட்டுகிறது என்று சிவகுமார் புகழாரம் சூட்டினார்.
ஓர் அழகிய ஆலயத்தை நிறுவுவதில் வெற்றி கண்டுள்ள பானு சுவாமி மஹாராஜ் அவர்களுக்கும், அவர் தலைமையிலான பொறுப்பாளர்களுக்கும் தமது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக டத்தோ சிவகுமார் தமது உரையில் குறிப்பிட்டார்.
முன்னதாக, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவருளைத் தாங்கிய பக்தி பரவசமூட்டும் பஜன் பாடப்பட்டது.
இத்திறப்பு விழாவில் ஆலய நிர்வாக ஆணையர் பானு சுவாமி மஹாராஜ், மலேசிய இஸ்கோனின் உதவித் தலைவர் குரோபா சிந்து கிருஷ்ணா என்ற பிரபு மற்றும் இஸ்கோனின் கோலாலம்பூர், சரவாக் ஆலயத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.