கோலாலம்பூர், ஏப்ரல்.30-
கோலாலம்பூர், சுங்கை பீசியில் உள்ள ஜாலான் ராசாக் மென்ஷன் ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியின் 39 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த 19 வயதுடைய இந்திய இளைஞர் விமானத்துறை மாணவர் என்று அடையாளம் கூறப்பட்டுள்ளது.
நேற்றிரவு 10.53 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் அந்த ஆடம்பர அடுக்குமாடி வீட்டுப்பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள வேளையில் அந்த இளைஞர் மிக அமைதியான நபர் ஆவர் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

38 ஆவது மாடியில் வசித்து வந்த அந்த மாணவன், படிக்கட்டு வாயிலாக 38 ஆவது மாடிக்குச் சென்றது மற்றும் படிக்கட்டு கண்ணாடி உடைக்கப்பட்டது முதலிய காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த மாணவனின் இறப்பை திடீர் மரணம் என்று போலீசார் வகைப்படுத்திய போதிலும் அது குறித்து பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இதுவரையில் அந்த மாணவனின் மூத்த சகோதரியிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

39 ஆவது மாடியிலிருந்து விழுந்த போது கீழே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரின் கூரை மீது விழுந்ததால் அந்த மாணவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சவப் பரிசோதனைக்காக சடலம், சென்சலோர் துவான்கு மூஹ்ரிஸ் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

மாணவனின் குடும்பத்தினர் கூறுகையில் அவருக்கு காதலி யாரும் இல்லை என்றும் மிக அமைதியானவர் என்றும் கடந்த சில தினங்களாக அவரிடம் மாறுதலுக்கான எந்தவோர் அறிகுறியும் காண முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.