கோலாலம்பூர், மே.02-
தனியார் கிளினிக்குகளில் பெறப்படும் மருந்துப் பொருட்களுக்கு அவற்றின் விலை, கட்டாயமாகக் காட்சிக்கு வைக்கப்பட வேண்டும் என்று நேற்று மே 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது, தங்களுக்கு எதிராக இழைக்கப்படும் மாபெரும் துரோகச் செயலாகும் என்று மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்த முதல் நாளான நேற்று மே முதல் தேதி, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் நேற்று பல கிளினிக்குகளில் சோதனையிடத் தொடங்கியிருப்பதாக தனியார் மருத்துவர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
மருந்துப் பொருட்களின் விலைப் பட்டியலை காட்சிக்கு வைக்காத கிளினிக்குகள், அடுத்த 3 நாட்களுக்குள் மருந்து விலைப் பட்டியலை காட்சிக்கு வைக்க வேண்டும் என்று எச்சரிக்கும் நோட்டீஸை அமலாக்க அதிகாரிகள் வழங்கியிருப்பதாக அந்த சம்மேளம் கூறுகிறது.
மூன்று மாதங்களுக்குள் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் மற்றும் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் அர்மிஸான் முகமட் அலி வலியுறுத்திய வேளையில் முதல் நாளிலேயே இத்தகையச் சோதனை எவ்வாறு நடத்தப்பட்டது என்று அந்தச் சம்மேளனம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஒரே மாதிரியான சிகிச்சை, ஒரே மாதிரியான மருந்து வகைகள், ஒரு கிளிக்கில் கட்டணம் 42 ரிங்கிட் விதிக்கப்படுகிறது. மற்றொரு கிளினிக்கில் 85 ரிங்கிட் விதிக்கப்படுகிறது. எப்படி இந்த கட்டண உயர்வு என்பது குறித்து கேள்வி எழுப்ப்பட்டுள்ள வேளையில் தனியார் மருத்துவமனைச் சங்கம் இதுவரை வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.