புதுடெல்லி, மே.02-
இந்தியா – பாகிஸ்தான் இடையே எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில், போர் பதற்றம் உச்ச நிலையை அடைந்துள்ளது.
இந்தியாவின் தாக்குதலைச் சமாளிப்பதற்கு பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் முகமட் ஆசிம் மாலிக்கை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அந்நாடு நியமித்துள்ளது.
24 மணி நேரம் முதல் 38 மணி நேரம் வரை போர் மூளும் அபாயம் இருப்பதாக நேற்று நேரம் கணிக்கப்பட்ட நிலையில், தனது எல்லைப் பகுதியில் இராணுவக் கவச வாகனங்களையும், இராணுவத் தளவாடங்களையும் இந்தியா குவித்து வருகிறது.
இந்தியா ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் கடந்த வாரம் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் மிக மோசமானத் தாக்குதலை நடத்தியதில், அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இந்தியா தனது ராணுவ வீரர்கள், போர் விமானங்கள், போர் கப்பல்கள் தயார் நிலையில் நிறுத்தியுள்ளது.
காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்து இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் தொடுக்கும் என பாகிஸ்தான் அமைச்சர்கள் பதறி வருகின்றனர்.
இந்த முறை தாக்குதல் உறுதி என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததைத் தொடர்ந்து தாக்குதலைச் சமாளிக்க பாகிஸ்தானும் தனது இராணுவத் தளவாடங்களைக் குவித்து வருகிறது.
இந்நிலையில் போர் தொடர்பில் வியூகம் நிறைந்தவர் என்று கருதப்படும் பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் முகமட் ஆசிம் மாலிக், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.