பெட்டாலிங் ஜெயா, மே.03-
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் ரஃபிஸி ரம்லி, பதவி விலகுதற்கானத் தனது நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற பிகேஆர் கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்றக் கூட்டத்திற்குப் பின்னர் தனது ஆதரவாளர்களுடன் நடைபெற்ற ஒரு சந்திப்புக் கூட்டத்தில் பதவி விலகுவதற்கான தனது நோக்கத்தை ரபிஸி ரம்லி வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.
எனினும் ரஃபிஸி தனது அலுவலகத்தை காலி செய்து விட்டதாகக் கூறப்படுவதை அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் மறுத்துள்ளன.
அண்மையில் நடைபெற்ற PKR கட்சியின் தொகுதி அளவிலான தேர்தலில், தேர்தல் நடத்தப்பட்ட முறையில் அதிருப்தி கொண்டுள்ள ரஃபிஸி, தனது பதவியை ராஜினமா செய்வதற்கான தனது விருப்பத்தைத் தெரிவித்து இருந்தார் என்று அவரின் தீவிர ஆதரவாளர் ஒருவரை மேற்கோள் காட்டி சீனப் பத்திரிக்கை சின் சியூ டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.
பொருளாதார அமைச்சரான ரஃபிஸி, தற்போது விடுமுறையில் உள்ளார். வரும் மே 31 ஆம் தேதி வரை அவர் விடுப்பில் இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.