ஷா ஆலாம், மே.03-
சிலாங்கூரில் உள்ள பல மாவட்டங்களில் கடந்த வியாழக்கிழமை தொடங்கி நேற்று வெள்ளிக்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் காசாக் 2025 எனும் சோதனை நடவடிக்கையின் மூலம் அரசாங்க உதவித் தொகையான மானிய விலைக்கு உட்பட்ட 90 எல்பிஜி திரவ பெட்ரோலிய எரிவாயு கலன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் சிலாங்கூர் மாநில கிளைகளான கோம்பாக், ஷா ஆலாம், பெட்டாலிங் ஜெயா, காஜாங், சிப்பாங், கோல குபு பாரு மற்றும் கோலசிலாங்கூர் ஆகிய கேபிடிஎன் அமலாக்க அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஓப்ஸ் காசாக் 2025 சோதனை நடவடிக்கை ஏக காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக அதன் சிலாங்கூர் மாநில இயக்குநர் முகமட் ஸுஹைரி மாட் ராடேய் தெரிவித்தார்.
உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் சிலாங்கூர் மாநிலத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஓப்ஸ் காசாக் 2025 நடவடிக்கையில் 35 வர்த்தக வளாகங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கோழிப் பண்ணை நிறுவனங்கள், சமையல் எரிவாயு விநியோகிப்பு வளாகங்கள், சலவைக் கடைகள் மற்றும் உணவகங்களை இலக்காக கொண்டு இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
இந்தச் சோதனை நடவடிக்கையின் வாயிலாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 8 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள 90 எல்பிஜி கலன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் முகமட் ஸுஹைரி தெரிவித்தார்.