வேன் ஓட்டுநரை 7 நாட்கள் தடுத்து வைப்பதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது

இஸ்கண்டார் புத்ரி, மே.03-

பள்ளி வேனில் 4 மணி நேரத்திற்கும் கூடுதலாகக் கைவிடப்பட்ட நிலையில், மூச்சுத் திணறலுக்கு ஆளாகி 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள வேன் ஓட்டுநரை, 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியைப் போலீசார் பெற்றுள்ளனர்.

56 வயதுடைய அந்த வேன் ஓட்டுநர், கடந்த புதன்கிழமை, ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி, தாமான் புக்கிட் இண்டாவில் கைது செய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் எம். குமரேசன் தெரிவித்தார்.

அந்த நபருக்கு பழைய குற்றப்பதிவுகள் எதுவும் இல்லை. அதே வேளையில் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது என்று குமரேசன் குறிப்பிட்டார்.

தாமான் புக்கிட் இண்டாவில் உள்ள பாலர் பள்ளியில் பயின்று வந்த அந்தச் சிறுவன், கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 7.30 மணியளவில் சம்பந்தப்பட்ட பள்ளி வேனில் பாலர் பள்ளிக்குப் புறப்பட்டான்.

அனைத்து மாணவர்களையும் தத்தம் பள்ளிகளில் இறக்கி விட்டப் பின்னர் வேன் ஓட்டுநர், தனது வீட்டிற்கு சென்று விட்டார். மதியம் 12 மணியளவில் மீண்டும் வேனை எடுத்த போது, வேனுக்குள் அந்த ஐந்து வயது சிறுவன் சுயநினைவு இழந்த நிலையில் கிடந்தது அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அந்தச் சிறுவன், ஜோகூர் பாரு, சுல்தானா அமீனா மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்லப்பட்ட போது, அந்த பாலகன் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் சம்பந்தப்பட்ட சிறுவனின் பெற்றோருக்கு மட்டுமின்றி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS