கோல சிலாங்கூர், மே.03-
கோல சிலாங்கூர், பெஸ்தாரி ஜெயாவில் உள்ள செம்பனை ஆயில் மில் தொழிற்சாலையில் நீராவி கொதி இயந்திரமான பொய்லர் வெடித்ததில் நான்கு தொழிலாளர்கள் கடும் தீக்காயங்களுக்கு ஆளாகினர்.
இச்சம்பவம் இன்று காலை 8.55 மணியளவில் நிகழ்ந்ததாக தீயணைப்பு, மீட்புப்படையின் சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
இவ்விபத்து தொடர்பாக அவசர அழைப்பைப் பெற்ற பெஸ்தாரி ஜெயா தீயணைப்பு நிலையத்தின் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சோதனையிட்டதில் உள்ளூர் தொழிலாளர் ஒருவர், வங்காளதேசப் பிரஜை ஒருவர் மற்றும் இரண்டு நேப்பாளியர்கள் நீராவி தெறித்து தீக்காயங்களுக்கு ஆளானது தெரியவந்துள்ளது. 27 முதல் 38 வயதுக்கு உட்பட்ட அந்த நான்கு தொழிலாளர்களும் தஞ்சோங் காராங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அஹ்மாட் முக்லிஸ் குறிப்பிட்டார்.