கோலாலம்பூர், மே.03-
தனியார் கிளினிக்குகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் மருந்துகளின் விலைப் பட்டியலைப் பார்வைக்கு வைக்க வேண்டும் என்ற புதிய சட்டவிதிமுறை மே முதல் தேதி அமலுக்கு வந்த வேளையில், அதனைக் கடுமையாக எதிர்க்கும் மருத்துவர்கள், வரும் செவ்வாய்க்கிழமை புத்ராஜெயாவில் சுகாதார அமைச்சு முன் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருக்கின்றனர்.
ஒரே தன்மையைக் கொண்ட மருந்தின் விலை, ஒவ்வொரு கிளினிக்கிற்கும், ஒவ்வொரு மருத்துவமனைக்கும் மாறுபட்டு, கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பரவலான புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், அந்த மருந்துகளின் விலையைக் கட்டாயமாக மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று புதிய சட்டவிதி வலியுறுத்துகிறது. இந்நிலையில் அரசாங்கத்தின் இந்த புதிய கட்டுப்பாட்டிற்கு தாங்கள் அடிப்பணியப் போவதில்லை என்று மருத்துவர்கள் சூளுரைத்துள்ளனர்.
தங்களைப் பிரநிதிக்கும் மருத்துவர் சங்கத்துடன் முறையாக பேச்சுவார்த்தை நடத்தாமல், இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்திருப்பதைத் தாங்கள் கடுமையாக எதிர்ப்பதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவர்கள் நடத்தவிருக்கின்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அரசாங்கம் அடிப்பணிய போகிறதா? அல்லது மருந்துகளின் விலைப் பட்டியலைப் பொது மக்களின் பார்வைக்கு வைப்பதில் தனியார் துறை மருத்துவர்களுக்கு அப்படி என்ன சிரமம் காத்திருக்கிறது என்பதை வினவப் போகிறதா? என்பது முக்கியக் கேள்வியாக இருந்து வருகிறது.
அண்மைய காலமாக தனியார் கிளினிக்குள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவச் சிகிச்சைக்கான கட்டணம் பல மடங்காக உயர்ந்திருப்பது குறித்து மக்கள் தொடர்ந்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதற்கு தனியார் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகள் கூறுகின்ற காரணம், மருந்துப் பொருட்களின் விலை உயர்ந்து விட்டதாகக் குற்றஞ்சாட்டுகின்றன.
உண்மையிலேயே மருந்துப் பொருட்களின் விலை உயர்வு கண்டுள்ளதா? அல்லது அந்தக் காரணத்தை ஒரு சாக்காகப் பயன்படுத்தி, சிகிச்சைக் கட்டணத்தை உயர்த்தி வருகின்றனவா? என்ற கேள்வி பல்வேறு தரப்பினர் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில் அனைத்து தனியார் கிளினிக்குள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் மருந்துகளின் விலைப் பட்டியலைப் பொது மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று புதிய சட்டத்தின் வாயிலாக அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.