புத்ராஜெயா, மே.04-
2025-2030 நுரையீரல் சுகாதார முன்முயற்சியின் கீழ், குறிப்பாக நுரையீரல் புற்றுநோயைத் தொடக்கக் கட்டத்திலேயே கண்டறிவதற்காக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நுரையீரல் நோய்களைப் பரிசோதிக்கும் கண்டறியும் முறையை சுகாதார அமைச்சு மாற்றியமைக்கவுள்ளது. எக்ஸ்ரே தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நுரையீரல் முடிச்சுகளைக் கண்டறிந்து நுரையீரல் புற்றுநோயைத் தொடக்கக் கட்டத்திலேயே கண்டறிவதுடன், காசநோய் போன்ற பிற நோய்களையும் கண்டறிய முடியும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
இந்தப் புதிய பரிசோதனை முறை முதன்மை சுகாதார நிலையங்களில் குறைந்த செலவில், எளிதில் அணுகக்கூடிய வகையில், துரிதமாகவும் துல்லியமாகவும் நோய்களைக் கண்டறியும் திறனுடன் வழங்கப்படும். மலேசியாவில் நுரையீரல் நோய்கள் தொற்று நோயாகவும் தொற்றாத நோயாகவும் உள்ளன என்றும், புகைபிடித்தல், சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற ஆபத்து காரணிகளிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.