கோலாலம்பூர், மே.04-
ஊடகத் தனியுரிமை குறியீட்டில் மலேசியாவின் நிலை ஒற்றை அளவுகோலாக பார்க்கப்படக்கூடாது என்றும், ஊடகவியலாளர்களின் நலனை மேம்படுத்த ஒரு வாய்ப்பாகக் கருதப்பட வேண்டும் என்றும் தொடர்பு, பல்லூடக அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல் கூறினார். ரிபோர்ட்டர்ஸ் வித்அவுட் போர்டர்ஸ் எனப்படும் எல்லைகள் இல்லா செய்தியாளர்கள் அமைப்பின் அறிக்கையில் ஏற்படும் மாற்றங்கள், ஒரு நாட்டின் கொள்கை மாற்றங்களை மட்டுமல்ல, மற்ற நாடுகளின் பின்னடைவையும் சார்ந்துள்ளது என்றார்.
மலேசிய ஊடக மன்றத்திற்கான புதியச் சட்டத்தை உருவாக்குவது போன்ற நேர்மறையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இஃது ஊடகச் சூழலை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்து தொழிற்சங்கங்களுடனும் அரசு சாரா நிறுவனங்களுடனும் கலந்துரையாட அவர் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.