கொழும்பு சென்ற விமானத்தில் திடீர் சோதனை

கொழும்பு, மே.04

சென்னையில் இருந்து, இலங்கையின் கொழும்புவுக்குச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் அண்மையில் நடத்திய தாக்குதலில், 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்க, இந்தியா ஆயத்தமாகி வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு, 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம், நேற்று மதியம் 12:00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இந்த விமானத்தில் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இருப்பதாக, கொழும்பு விமான நிலைய அதிகாரிகளுக்கு இந்திய உளவுத் துறை அதிகாரிகள் தகவல் அளித்தனர். அதனை அடுத்து விமானம் தரையிறங்கியதும், விமானத்தில் இலங்கை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். எனினும் சந்தேகத்துக்குரிய நபர்கள் யாரும் இல்லை.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘விமானத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக சென்னையிலிருந்து தகவல் வந்தது. விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் முழுமையாக சோதனை நடத்தியதில், எந்த விதமான ஆயுதங்களும் இல்லை. இது குறித்து சென்னை விமான நிலைய போலீசார் விசாரித்து வருகின்ற்ர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS