கோலாலம்பூர், மே.04-
எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் சென்டிரியான் பெர்ஹாட் நிதியிலிருந்து 27 மில்லியன் ரிங்கிட் பணமோசடி செய்ததாகக் கூறப்படும் மூன்று குற்றச்சாட்டுகளை இரத்து செய்ய முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக் சமர்ப்பித்த பிரதிநிதித்துவத்தைச் சட்டத் துறை ஏற்றுக் கொண்டதா என்பதை நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை அன்று அவர் அறிவார். இந்த பிரதிநிதித்துவத்தின் முடிவு குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க வழக்குத் தரப்புக்கு வசதியாக, மார்ச் 10 அன்று உயர் நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டி இந்த வழக்கு மேலாண்மைத் தேதியை முடிவு செய்தார்.
நஜிப்பின் வழக்கறிஞர் டான் ஶ்ரீ முகமட் ஷாஃபி அப்துல்லா, கடந்த ஆகஸ்ட் 2023 இல் சட்டத் துறைக்கு அனுப்பப்பட்டப் பிரதிநிதித்துவம் குறித்து பதிலைப் பெற கூடுதல் கடிதத்தைச் சமர்ப்பிப்பதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்தார். எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் சென்டிரியான் பெர்ஹாட்டுக்குச் சொந்தமான 42 மில்லியன் ரிங்கிட் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியக் குற்றத்திற்காக நஜிப் தற்போது காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.