ஜார்ஜ்டவுன், மே.05-
பினாங்கு மாநிலத்தில் ஜெலுதோங்கில் குப்பைகளை அகற்றும் சர்சைக்குரிய பிரதான நிர்மாணிப்புத் திட்டம் தொடர்பில் நடைபெற்ற டவுன்ஹால் கூட்டம், கடும் வாக்குவாதத்திற்குப் பிறகு பெரும் அமளி துமளியில் முடிவுற்றது.
பினாங்கு மாநகர் மன்றத் தலைவர் டத்தோ பண்டார் ராஜேந்திரன் அந்தோணிக்கும், பினாங்கு முன்னாள் பத்து உபான், பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் தி. ஜெயபாலனுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மாநகர் மன்றத் தலைவர் என்ற முறையில் டத்தோ பண்டார் ராஜேந்திரன், அந்த பிரதானத் திட்டத்தின் மேம்பாட்டாளரைப் பாதுகாப்பதாக ஜெயபாலன் குற்றஞ்சாட்டினார்.
டத்தோ பண்டார் ராஜேந்திரன் கொள்கை வகுப்பாளர் அல்ல. அவர் டத்தோ பண்டார் அந்தஸ்தில் ஒரு பணியாளர் மட்டுமே. ஆனால், குப்பை அகற்றும் பிரதானக் கட்டுமானத் திட்டத்திற்கு மக்கள் ஆட்சேபிக்கும் நிலையில் ராஜேந்திரன், அந்த திட்டத்தின் மேம்பாட்டாளரை ஆதரிப்பது போல் உள்ளது என்று ஜெயபாலன் குற்றஞ்சாட்டினார்.