முதலில் மலாய்க்காரர்களே எனக்கு முக்கியம் என்று கூறிய முகைதீன் யாசின், எவ்வாறு நாட்டை ஆளப் போகிறார்?

பெட்டாலிங் ஜெயா, மே.05-

இந்த நாட்டில் மலாய்க்காரர்களே எனக்கு முக்கியம் என்று 15 ஆண்டுகளுக்கு முன்பு திருவாய் மலர்ந்த பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் முகைதீன் யாசின், எவ்வாறு நாட்டை ஆளப் போகிறார் என்று மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங் கேள்வி எழுப்பியுள்ளார்.

பல்லினம் வாழும் ஒரு நாட்டில் ஓர் இனத்திற்கே முதலிடம் முக்கியத்துவம், முன்னுரிமை என்று பேசியுள்ள முன்னாள் பிரதமர் முகைதீன், எவ்வாறு அனைத்து இனங்களையும் அரவணைத்து, நாட்டை முன்னெடுக்கப் போகிறார் என்று ஜசெக மூத்தத் தலைவரான லிம் கிட் சியாங் வினவியுள்ளார்.

மலாய்க்கார்களே எனக்கு முக்கியம், அதன் பிறகே மற்ற இனங்கள் என்று பகிரங்கமாக அறிவித்த முகைதீன் யாசின், மலேசியர்களுக்கு தாம் ஒரு முன்னுதாரணத் தலைவராக இருக்கப் போவதாக அறிவித்து இருப்பது வினோதமாக உள்ளது என்று அந்த மூத்த தலைவர் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

2010 ஆம் ஆண்டில் துணைப்பிரதமராக இருந்த முகைதீன் யாசின், தம்மை ஒரு மலாய்க்காரராக அடையாளப்படுத்திக் கொள்ளவே விரும்புவதாகவும், அந்த வகையில் இந்த நாட்டில் மலாய்க்காரர்களுக்கே முன்னுரிமை என்று பேசியிருப்பதை முகைதீன் யாசின் மறுக்க முடியுமா? என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான லிம் கிட் சியாங் வினவினார்.

WATCH OUR LATEST NEWS