கோலாலம்பூர், மே.05-
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற நிலையைத் தணிக்க மலேசியா உதவத் தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
கடந்த மாதம் பிற்பகுதியில் இந்தியாவின் முக்கியச் சுற்றுலாத் தளமான காஷ்மீரில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் சுற்றுப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் போர் வெடிக்கலாம் என்று உலக நாடுகள் அஞ்சி வரும் வேளையில் இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட இந்த பதற்றத்தைத் தணிக்க மலேசியா உதவத் தயாராக இருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷாரிஃப், வரும் வெள்ளிக்கிழமை மலேசியாவிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொள்ளத் திட்டமிட்டு இருந்தார். காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தினால் அவரின் வருகையைக் கட்டாயமாக ஒத்தி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் விளக்கினார்.
பயங்கரவாத வன்முறைகள் எந்த ரூபத்தில் இருந்தாலும் அதனை மலேசியா கண்டிப்பதாக குறிப்பிட்ட டத்தோஸ்ரீ அன்வார், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான இந்த பதற்ற நிலை, விரைவில் தணியும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.