புத்ராஜெயா, மே.05-
எஸ்பிஆர்எம் விசாரணைக்காக புத்ராஜெயாவிற்குச் செல்வதாகக் கூறிச் சென்ற குடும்ப மாது பமேலா லிங், காணாமல் போனது தொடர்பான மர்மம் நீடித்து வரும் வேளையில் அவர் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த மாதுவைக் கடத்தியவர்கள், போலீஸ் சீருடையில் காணப்பட்டனர் என்று அவரை எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்குத் தனது காரில் அழைத்துச் சென்ற இ-ஹெய்லிங் ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
அந்த இ-ஹெய்லிங் ஓட்டுநர் கூறியுள்ள குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு தற்போது புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் ருஸ்டி ஈசா தெரிவித்துள்ளார்.
பமேலா லிங் கடத்தப்பட்ட அன்றைய தினமே போலீஸ் புகார் செய்யப்பட்டதாகவும், அந்த புகாரின் உள்ளடக்கத்தைத் தாம் பார்த்ததாகவும் அவரின் வழக்கறிஞர் என். சிவநந்தன் தெரிவித்தார்.
எஸ்பிஆர்எம் தலைமையகத்தைக் கிட்டத்தட்ட நெருங்கி விட்ட நிலையில் பமேலா லிங் பயணித்த இ-ஹெய்லிங் காரை, இதர மூன்று வாகனங்கள் தடுத்து நிறுத்தியதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடவர் ஒருவர் போலீஸ் ஆடையின் மீது ஜேக்கெட் அணிந்த நிலையில் மற்றொரு நபரான பெண் போலீஸ் சீருடையில் காணப்பட்டுள்ளார். இ-ஹெய்லிங் ஓட்டுநரின் மைகாட் அட்டையை வாங்கிக் கொண்ட அவர்கள், பமேலா லிங்கை தங்கள் காரில் ஏறும்படி உத்தரவிட்டனர்.
இந்நிலையில் பமேலா லிங் காணாமல் போனது தொடர்பில் இதுவரை இரண்டு போலீஸ் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் சிவநந்தன் தெரிவித்தார்.
ஒரு வர்த்தகரின் மனைவியான பமேலா லிங், தனது கணவர் சம்பந்தப்பட்ட எஸ்பிஆர்எம் புலன் விசாரணை தொடர்பில் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்குமூலம் அளிப்பதற்காக புற்றாஜெயாவிற்குச் சென்ற போது மர்ம நபர்களால் அவர் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.