ஷா ஆலாம், மே.05-
மலாய்க்காரர்களின் சிறப்பு உரிமையை அங்கீகரிப்பதானது இந்த நாட்டில் உள்ள பிற இனங்களின் உரிமைகள் மற்றும் பங்களிப்புகளை மறுப்பதற்கு ஒரு சாக்காகப் பயன்படுத்தப்படக்கூடாது என்று மசீச கேட்டுக் கொண்டுள்ளது.
சீனர்கள், இந்தியர்கள் மற்றும் சபா, சரவாக்கில் உள்ள பழங்குடி சமூகங்களும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளன. இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மசீச. இன மற்றும் சமய உறவு பிரிவின் துணைத் தலைவர் ரோஜர் யாப் கூறினார்.
மலாய்க்காரர்களைப் போலவே சீனர்கள், இந்தியர்கள் மற்றும் பழங்குடியினர் மலேசியாவில் பிறந்து வளர்ந்துள்ளனர். அவர்களும் நாட்டை நேசிக்கின்றனர். தேசிய கீதத்தைத் தங்களின் சுவாசமாகக் கொள்கின்றனர்.
எனவே கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 153வது பிரிவு இதர சமூகங்களின் நியாயமான நலன்களைப் பாதுகாக்கும் பொறுப்பை வலியுறுத்துகிறது என்பதை மலாய்க்காரர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம் என்று ரோஜர் யாப் கூறினார்.
மலேசியா எப்போதும் மலாய் மண்ணின் நிலமாகவே இருக்கும் என்றும் அது மாறாது என்றும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் முகமட் அக்மால் வலியுறுத்தியிருப்பது தொடர்பில் ரோஜர் யாப் எதிர்வினையாற்றினார்.