மலேசியாவிற்கு எதிராக அமெரிக்கா வரி விதிப்பின் தாக்கம் – முன்கூட்டியே மதிப்பீடு செய்ய இயலாது

கோலாலம்பூர், மே.05-

மலேசியாவிற்கு எதிராக அமெரிக்கா விதிக்கவிருக்கும் வரி விதிப்பின் தாக்கம் குறித்து முன்கூட்டியே மதிப்பீடு செய்ய இயலாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் மலேசியப் பொருட்களுக்கு 24 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அதே வேளை இந்த 24 விழுக்காடு வரி விதிப்பை 90 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் 24 விழுக்காடு வரி விதிப்பினால் மலேசியாவிற்கு எத்தகைய தாக்கம் ஏற்படும் என்பது குறித்து முன்கூட்டியே கணிக்க இயலாது என்று பிரதமர் விளக்கினார்.

எனினும் மலேசியா ஏற்றுமதி செய்யக்கூடிய மென்பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுமானால் அதனை எதிர்கொள்வதில் மலேசியாவிற்குச் சிரமம் ஏற்படும் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

மேலும் அமெரிக்கா விதிக்கவிருக்கும் வரிகளைத் தொடர்ந்து உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளைத் தாண்டி, மலேசியாவின் வலுவான பொருளாதார அடிப்படைகள் நாட்டை வழிநடத்த உதவும் என்ற பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா அறிவித்துள்ள வரி விதிப்பு தொடர்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஒரு நாள் சிறப்பு மக்களவைக் கூட்டத்தில் உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS