கிள்ளான், மே.06-
கடந்த வெள்ளிக்கிழமை இரவு, சிலாங்கூர், செமிஞியில் ஒரு வீட்டில் மாதுவும்,அவரின் உறவினர் ஒருவரும் இறந்துக் கிடந்தது, கொலைச் சம்பவமாகும் என்று சந்தேகிக்கப்படுவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் துணைத் தலைவர் துணை கமிஷனர் முகமட் ஸைனி அபு ஹாசான் தெரிவித்தார்.
அவ்விருவரின் உடல்களிலும் காயங்கள் எதுவும் காணப்படவில்லை. பிளாஸ்திக் பேக் suffocation எனும் முறையில் இக்கொலைகள் நடந்துள்ளன என்று நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
தலையில் பிளாஸ்டிக் பையினால் கட்டப்பட்டு, அவ்விருவரும் மூச்சடைக்கச் செய்யப்பட்டு இருக்கலாம் என்பது பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று முகமட் ஸைனி தெரிவித்தார்.
சில நாட்களாக தனது அக்காளைக் காணவில்லை என்று சந்தேகித்த அந்தப் பெண்ணின் 48 வயது தம்பி, செமினியில் உள்ள அவரின் வீட்டிற்கு சென்ற போது, வீடு பூட்டப்பட்டு இருந்த நிலையில், வீட்டில் துர்நாற்றம் வீசுவதைக் கண்டு இது குறித்து போலீசுக்குத் தகவல் தந்ததாக முகமட் ஸைனி குறிப்பிட்டார்.
அவ்விருவரும் பத்து நாட்களுக்கு முன்பு இறந்து இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. இருவரின் உடல்களும் செர்டாங் மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் இச்சம்பவம் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.