கோலாலம்பூர், மே.06
கடந்த மாதம் நடைபெற்ற பிகேஆர் கட்சியின் தொகுதி அளவிலான தேர்தலில் தோல்விக் கண்ட முக்கியத் தலைவர்கள், தேர்தல் முடிவைத் திறந்த மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ பாஃமி பாஃட்சீல் கேட்டுக் கொண்டார்.
கட்சி உறுப்பினர்கள், ஒருமித்த கருத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு ஏற்ப நடப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற கட்சியின் தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சரான டத்தோ பாஃமி வலியுறுத்தினார்.
தொகுதி அளவிலான தேர்தலில் ஓர் அணியினராகப் போட்டியிட்டவர்களுக்கு ஒரே மாதிரியான வாக்குகள் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ள புகார் குறித்து ஆராயப்பட்டதில் அதில் அடிப்படை இருப்பதாக கண்டறியப்படவில்லை என்று டத்தோ பாஃமி விளக்கினார்.