பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு சைபுஃடின் போட்டியிடக்கூடும்

கோலாலம்பூர், மே.06-

பிகேஆர் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கானப் பதவிகளுக்கு நடைபெறும் தேர்தலில் கட்சியின் உச்சமன்ற உறுப்பினரும், உள்துறை அமைச்சருமான டத்தோ ஶ்ரீ சைபுஃடின் நசுத்தியோன் இஸ்மாயில், தேசிய துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிகேஆர் கட்சியின் தேசியத் துணைத் தலைவரும், பொருளாதார அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ரபிஃஸி ரம்லி, தனது பதவியைத் தற்காத்துக் கொள்வது குறித்து இன்னும் எந்தவொரு அறிப்பையும் வெளியிடாத நிலையில் அந்தப் பதவிக்கு சைபுடின் குறிவைக்கலாம் என்று கூறப்படுகிறது.

பிகேஆர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டே நாட்கள் இருக்கும் பட்சத்தில் இது குறித்து சைபுஃடின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளையில் அரசியல் வாழ்வில் ஏற்றத்தையும், இறக்கத்தையும் சந்தித்தவரான சைபுஃடின், கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு மிகப் பொருத்தமானவர் என்று பிகேஆர் கட்சியின் திதிவங்சா தொகுதி தலைவர் சையிட் பஸ்லி ஷா சையிட் ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தேசியத் துணைத் தலைவராக சைபுஃடின் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு நடப்புத் துணைத் தலைவர் ரபிஃஸி ரம்லி வழிவிட வேண்டும் என்று அந்த தொகுதித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS