ஜாலோர் கெமிலாங்கில் நிகழ்ந்த தவறு – தேர்வு வாரிய இயக்குநர், அதிகாரிகள் மாற்றப்பட்டனர்

கோலாலம்பூர், மே.06-

2024 ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் வெளியான அன்று, தேர்வு முடிவுகளின் பகுப்பாய்வு என்ற பெயரில் கல்வி அமைச்சு வெளியிட்ட செய்தி அறிக்கையில் மலேசிய தேசியக் கொடியான ஜாலோர் கெமிலாங், தவறாக சித்தரிக்கப்பட்டதற்கு தார்மீக பொறுப்பேற்றுள்ள கல்வி அமைச்சு, தேர்வு வாரிய இயக்குநரையும், சில முக்கிய அதிகாரிகளையும் பணியிடம் மாற்றம் செய்துள்ளது.

ஜாலோர் கெமிலாங்கில் நிகழ்ந்த தவறு தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்டதாக கூறப்படும் கல்வி அமைச்சு, கவனக்குறைவாக நிகழ்ந்த இந்த தவற்றுக்கு பொறுப்பேற்றுள்ள அதிகாரிகளை கடந்த வாரம் பணியிடம் மாற்றம் செய்துள்ளது.

பணியிடம் மாற்றப்பட்டுள்ள கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளில் தேர்வு வாரிய இயக்குநர் ரொஸ்லான் அபு ஹாசானும் அடங்குவர்.

கடந்த அக்டோபர் மாதம் தேர்வு வாரியத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்ட ரொஸ்லான் அபு ஹாசான், கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் பயிற்சி மையமான இன்ஸ்திதியூட் அமினுடின் பாக்கி கல்விக் கழகத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ரொஸ்லாம் அபு ஹாசானுக்குப் பதிலாக தேர்வு வாரியத்தின் துணை இயக்குநர் ஹபிபா மாட் ரெஜாப், இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS