தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘கூலி’ என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பரபரப்பாக உள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவருடைய அடுத்த படம் கார்த்தி நடிக்கும் ’கைதி 2′ என்றும், அந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது. மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. ‘பென்ஸ்’ என்ற டைட்டிலில் உருவாகும் இந்த படத்தில் லோகேஷ் கனகராஜின் எல்சியூ காட்சிகளும் இருக்கும் என்றும் கூறப்பட்டது.
ராகவா லாரன்ஸ் முக்கிய இடத்தில் நடிக்கும் இப்படத்தில், நிவின் பாலி மற்றும் இன்னொரு முக்கிய வேடத்தில் மாதவன் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது வந்துள்ள தகவலின்படி ‘பென்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் தொடங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பட குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.